Translate

வியாழன், 6 ஜூன், 2013

*சிற்றிதழ் கவிஞர்களின் படைப்பாளுமை*
            *செ.சு.நா.சந்திரசேகரன்*.எம்.ஏ.,எம்.ஏ.,எம்.பில்.,
            முனைவர் பட்ட ஆய்வாளர்.,(பகுதி)
            மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
            திருநெல்வேலி.

நவீன இலக்கியத்தினை இக்காலகட்டத்தில் முன்னெடுத்துச்செல்லும்
சாதனமாகச்சிற்றிதழ்கள் விளங்குகின்றன.பேரிதழ்கள் வணிகமுறையிலானப் பாதையில்
செல்லும் நிலையில்,படைப்பாளர்களின் படைப்புத்திறனைக் கவனத்தில்
கொள்ளாது,பெரும்பாலான வாசகர்களின் மனநிலையை மட்டும் கருத்தில்
கொள்கின்றன.இதற்கு மாறாகஇச்சிற்றிதழ்கள் படைப்பின்
திறன்,பரிசோதனைமுயற்சி,உலகத்தரம், போன்றவற்றைக் கவனத்தில் கொண்டு
இலக்கியத்தினையும்,இலக்கியத் தரத்தினையும் மேம்படுத்துகின்றன.சிற்றிதழ்களின்
இயல்பினைப் பொள்ளாச்சி நசன் கூறும் போது,"நுட்பமும் ,  ஆளுமையும் விரிந்த
மனப்பான்மையும் உடைய இதழாளர்களின் இதழ்கள் வரலாற்று
வரிசைச்சிற்றிதழ்களாகின்றன.நேருக்கு நேர் தாங்கள் காணும் உண்மை நிகழ்வுகளை
எழுத்தாக்கியும் பல்வேறு மொழிகளுக்கு இடையிலான ஒப்புமையையும் அதன் சாரத்தையும்
கொண்டு இதழுக்கான குறிப்பிட்டமொழியின் ஆளுமையுடன் கூடிய நுணுக்கமும் இலக்கிய
வடிவங்களை நுணுக்கி விவரிக்கும் பாங்கும் சிற்றிதழ்களின் சிறப்பு
இயல்புகளாகின்றன."(1) என்பார்.

சிற்றிதழ் கவிஞர்களின் புத்திலக்கியப் படைப்பில்,அவர்களின் படைப்பாளுமை
எவ்விதம் அமைகின்றன என்பதைக் காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகிறது.படைப்பைப்
பொறுத்தமட்டில் படைப்பாளனின் ஆளுமை இல்லாது எவ்விதப் படைப்பும்
வெளிவந்துவிடாது. சமூகத்தில்,தன் உள்ளத்திற்குள்,தான்
காணும்/சிந்திக்கும்/விரும்பும்/வெறுக்கும் ஒன்றையே படைப்பாக
வெளிக்கொணரமுயல்கின்றான்.இதற்குப் ப்ராய்டின் கோட்பாட்டின் படி அவனது மூன்று
நிலை மனதும் உதவுகின்றன.எதைச்சொல்லப்போகிறோம் என்பதை அவனது அனுபவமும்,அறிவும்
முடிவு செய்கின்றன. எனவே படைப்பின் அடி நாதமாக விளங்குகின்றவை படைப்பாளனின்
ஆளுமையாகத் தான் இருக்க முடியும்.புறமும் அகமுமான அமைப்பிலிருந்தே மானுடத்
துறைகள் தோன்றுகின்றன என அமைப்பியல்வாதிகளும் தம் கருத்தினை முன்வைக்கின்றனர்.
இவ்விதம் தம் படைப்பாளுமையைப் பல கோணங்களில் படைப்பாளர்கள் பதிவு
செய்கின்றனர்.இருப்பினும் இக்கட்டுரையில் ஆய்வு எல்லை கருதி படைப்பாளுமையில்
தாம் கண்ட வறுமைச்சூழ்நிலைகளை மட்டும் காணலாம்.

ஆளுமைத்தன்மை
படைப்பு,படைப்பாளன் ஆகிய இரண்டிற்குமான தொடர்பே இலக்கிய ஆளுமை
எனலாம்.படைப்பிற்கு உந்தப்படும் மன எழுச்சி,தன்னாளுமையாகப் படைப்பில்
மலர்கின்றது.ஆளூமை குறித்து ஆல்போர்ட் எனும் அறிஞர் கூறும் போது,"ஒவ்வொரு
மனிதனிடமும் குறிப்பிட்ட ஒரு வகையில் அவனது உடல் மனப்பண்புகள் சேர்ந்து
ஒருங்கமைந்து இருக்கும்.
இவ்வொருங்கமைப்பின் இயல்பு மனிதனுக்கு மனிதன் சிறிதேனும்
மாறுபட்டிருக்கும்.தனி மனிதன் ஒருவன் தன் சூழ்நிலையில்
எவ்வாறு செயல்படுகின்றான் என்பது இவ்வொருங்கமைப்பின் தன்மையைப் பொறுத்ததாகும்.
இத்தகைய உடல் ,மனப்பண்புகளின்
தனிப்பட்ட ஒருங்ககமைப்பு ஒருவனது ஆளுமையாகும்."(2)என்பார்.

வறுமை நிலையினைக் காட்டும் ஆளுமை
சிற்றிதழ் படைப்பாளர்கள்,தம் படைப்புகளில் அதிகமான அளவில் சமுதாயவியல் சிந்தனை
கொண்ட கவிதைகளைப் படைத்துள்ளனர்.அதிலும் வறுமைஸ் சூழ்நிலை அவர்கள் மனதில்
பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளன.வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும்
மானுட உணர்வுகளை எண்ணி வருந்தி உழல்பவர்களாக இவர்கள் மன நிலை உள்ளது.இம்மன
நிலையினை வாசகனுக்குக் கவிதைகளாகக் கடத்துகின்றான் கவிஞன்.இந்நிலையில்
முழுதும் வெற்றி பெற்ற படைப்பு ஆகிறது.கரிகாலன் தமது  வேதனை எனும் கவிதையில்,

        " வறுமையின் கொடுமையில்
         வாடிக் கிடக்கும் பெண்ணின்
         வரண்ட மார்பில்
         சுரக்காத பாலுக்காக்
         சுவைத்துக் கொண்டிருக்கும்
         குழந்தை."(3)
என்கின்றார் .குழந்தையின் தேவை, தாயின் இயலாமை, இவர்களிருவரிடத்திலும் ஊடாடும்
உணர்வுகள் படைப்பாளரின்
உள்ளத்தைக் கசக்கிப் பிழிகின்றன.எதார்த்தமுறையில் அதனைக்
காட்சிப்படுத்துகிறார். காட்சிக்குப் பின்புலத்தில் உள்ள
உணர்வே தலைப்பாகிறது.வாசகன் மனதில் இந்த உணர்வுகள் இன்னும் பல உணர்வுகளைத்
தோற்றுவிக்கின்றன.
        " நெய்திட்ட நூலை விட
         தைத்திட்ட நூல் அதிகம்
         ஏழையின் உடை.  ''(4)

எனும் கவிதை ஏழை நெசவாளியின் வறுமையினை விளக்குகிறது.சமூகத்தில் தான் காணும்
காட்சிகளைப் படைப்பாளன்
ஆழ்ந்து சிந்தித்து அதனைத் தன் படைப்பாளுமையால் பதிவு செய்கின்றான்.இதுவே
படைப்பாளனையும் படைப்பையும்
பிறவற்றிலிருந்து மேம்பட வைக்கின்றது."கலைஞர்கள் கலை பற்றிய ஆழ்ந்து அகன்ற
கண்ணோட்டத்தினை
 உடையவர்களாக,தம்மைச்சுற்றிக் காணப்படுகின்ற புறவுலகத்தைப் பற்றி அதிகம்
சிந்திப்பவர்களாகத் திகழ வேண்டும்.
இத்தகைய அணுகுமுறையே ஏனைய துறைகளிலிருந்து கலையை வேறுபடுத்திக்
காட்டுகிறது."(5) என்ற அறிஞரின்
கருத்தை இங்கு படைப்பாளுமையின் திறன் குறித்துக் கூறுவதோடு ஒப்பு நோக்கலாம்.

படைப்பாளுமையின் மற்றொரு கூறாக்ப், படைப்பில் கதாபாத்திரத்தையே உலவ விடுவதைக்
காணமுடிகின்றது.காட்சிகள்
தந்த உணர்வுகளைத் தானே கூறாமல் கதாபாத்திரத்தையே நேரடியாக வாசகனோடு பேச
விடுவது சிறந்த ஆளுமையாக
உணர முடிகின்றது.அவ்வாறாக,
       "இஸ்கூலுக்குப் போற ஆசை
        இனி எனக்கு
        வரவே வராது.
        சாகற வரைக்கும்
        தீக்குச்சி கம்பெனி தான்
        ஏன்னா.....
        வேற எடமே இல்லை
        எந் தொடையில
        அப்பா போடும்
      ' அதை' வாங்கிக்க...."(6)
இக்கவிதை அமைகிறது அப்பா, மகன், கம்பெனி,பள்ளி,சூடு இவை தான் இக்கவிதைக்குள்
ஊடுறுவி நிற்கும் காரணிகள்.
இவை ஒவ்வொன்றும் வாசகனுக்குள் வெவ்வேறான சோகக் கிளைகளை உருவாக்கிப் பல கதைகளை
உண்டு பண்ணுகின்றன.
இதே போல்,
        ''வறுமையே
         உன்னை எந்தாயினைப் போல்
         நேசிக்கின்றேன்!
         ஆம்!
         வளம் என்னை
         விரட்டியடித்த போது
         வரவேற்றது நீ தானே!"(7)
எனும் கவிதையில் வறுமையைப் பார்த்துப் பேசும் கதாபாத்திரத்தின் குரல், எதிர்
மறைச்சிந்தனையை வாசகனுக்குள்
புகுத்தி வருத்தப்பட வைக்கிறது.மலம் அள்ளும் தொழிலாளியின் வறுமையினைக்
கவிதையாக்கித் தரும் போது,
          "நாற்றம் நாசியில் ஏறிப் பிடறியில் தட்டி
           சிறுகுடல் பெருங்குடலைத் தின்னும்
           பதினொன்னாவது நாளில் பக்கிரிசாமி வருவான்
          தூக்கிப் பிடித்த ஈரத்துண்டோட நிற்பான்
          தீண்டாமலே ந்ழுவி விழும் பத்து ரூபாய்"(8)
என்கின்றார் வி.பாலு.அறிவியல் துறையில் வளர்ச்சியுற்ற பொழுதிலும்,இன்னும்
வறுமையின் பிடியில் இத்தொழிலில் ஈடுபடும்
மனிதர்களின் நிலை கொடுமையானது என்ற கருத்து வெளிப்படுகிறது.

படைப்பாளுமையில்,கவிஞன் எதனையும் தன் உணர்வுக்கரங்களால் பிடித்திழுத்து
உள்ளத்தில் கிடத்தி, அதே
உணர்வோடும்,சில நேரங்களில் மிகை உணர்வோடும் வெளிப்படுத்துகின்றான்.இதை வாசகன்
தன் அனுபவத்தோடுப்
பொருத்திடத் தனக்குள் அதனை இன்னும் பெரிதாக்கி உணர்கின்றான்.ஆகக் கவிஞனின்
படைப்பாளுமை கவிதைகளை
வளமாக்கி வரலாறாக்குகின்றன.கொடுமையான வறுமை சமூகத்தில் இல்லாதிருக்க வேண்டும்
என்ற எண்ணங்கள்
சிற்றிதழ் கவிஞர்களின் படைப்பாளுமையின் ஒரு கூறாக இருக்கின்றன.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------







அடிக்குறிப்புகள்;

1.பொள்ளாச்சி நசன்,சிற்றிதழ்கள்,பக்-84-85
2.www.ilankavi.blogspot.in/2011/05/blog-post.html.
3.கரிகாலன்,நண்பர்கள் தோட்டம்,அக்-நவ-99,ப-11
4.இரா.ரவி,மனித நேய மடல்,செப்-99,ப-10
5.Marx and Engels,the german ideolgy,moscow-1968,p-95
6.ஜெ.ஜெய சக்திவேல்,கவிக்காவிரி,ஏப்-மே-97,ப-2
7.என்.வாஞ்சினாதன்,தேசிய வலிமை,மே-99,ப-13
8.வி.பாலு.சுந்தரசுகன்,ஜுன்-97,ப-96

-----------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக