Translate

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

தமிழ்ச் சிற்றிதழ் கவிதைகளில் சமுதாயப் பார்வை


“வாழ்க்கையைக் கவித்துவப் போக்கில் பிரதிபலிப்பதற்கும், அங்கதமாக எழுதிக் காட்டுவதற்கும், வாழ்க்கையைப் பற்றிய சிறந்த, தெளிந்த தத்துவத்தையும், எதிர்காலம் பற்றிய எண்ணத்தையும் கவிஞன் அல்லது எழுத்தாளன் தெளிவாகப் பெற்றிருக்க வேண்டும்.”1 என்பதிற்கேற்பச் சிற்றிதழ்கள் சமூகப் பிரக்ஞையுடன் கவிதைகளை வெளியிட்டிருப்பதைக் காண முடிகின்றது. சமூகமும் இலக்கியமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் கவிஞனால் இத்தளத்தைச் சரியாகப் பதிவு செய்ய முடிந்திருக்கிறது.
சிற்றிதழ்கள், சமகால உலக இலக்கியங்களின் தரத்திற்கு இணையாகத் தமிழ் இலக்கியங்களைக் கொண்டு செல்கின்றன என்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாக அமைந்திருக்கிறது. எனவே அவ்வகைச் சிற்றிதழ்களில் சமுதாயக் கவிதைகள் எவ்விதம் பதிவு செய்யப் பெற்றிருக்கின்றன என்பதாக இவ்வாய்வு அமைந்திருக்கின்றது.
சிற்றிதழ்களின் இலக்கணம்
“நுட்பமும் ஆளுமையும் விரிந்த மனப்பான்மையும் உடைய இதழாளர்களின் இதழ்கள் வரலாற்று வரிசைச் சிற்றிதழ்களாகின்றன. நேருக்கு நேர் தாங்கள் காணும் உண்மை நிகழ்வுகளை எழுத்தாக்கியும், பல்வேறு மொழஜகளுக்கு இடையிலான ஒப்புமையையும் அதன் சாரத்தையும் கொண்டு இதழுக்கான குறிப்பிட்ட மொழியின் ஆளுமையுடன் கூடிய நுணுக்கமும் இலக்கிய வடிவங்களை நுணுக்கி விவரிக்கும் பாங்கும்-இவ்விதழ்களின் சிறப்பு இயல்புகளாகின்றன”2 என்பது சிற்றிதழ்களின் இலக்கணமாகக் கொள்ளப்படுகிறது.

சமுதாயக் கவிதைகள்

சிற்றிதழ்களில் காணலாகும் கவிதைகள் பல்திறத்தன. அவற்றில் சமுதாயக் கவிதைகள் பெரும்பங்கைப் பெற்று எழுதப் பெற்றிருக்கின்றன. அவற்றை,
1. தனிமனிதப் பிரச்சனைகள்
2. பொதுமைப் பிரச்சனைகள்
3. சமூகத் தீர்வுகள்

தனிமனிதப் பிரச்சனைகள்

சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் பல்வேறு பிரச்சனைகளையும், சந்தோசங்களையும் சமுதாயத்திலிருந்து பெறுகின்றான். இதன் விளைவாக ஏற்படும் மன உணர்வுகள் சில நேரங்களில் சமூகப் பின்னடைவையும், சில Nநுரங்களில் சமூக முன்னேற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. இதனடிப்படையில், “எந்த இலக்கியத்திற்கும் அடிப்படையான உள்ளீடாக அல்லது பொருண்மையாக மனிதனே காட்சி தருகின்றான். மனிதனின் ஆசை வேட்கைகளையும், செயல் திறனையும், வளர்ச்சி நிலையினையும் வீழ்ச்சியினையுமே இலக்கியங்கள் பிரதிபலித்து நிற்கின்றன:3 என்பரத அறிய முடிகின்றது. இவ்விதமான தனிமனிதச் சமுதாய உணர்வுக் கவிதைகள் சிற்றிதழ்களில் பெரும்பான்மையாக எழுதப் பெற்றிருக்கின்றன.
இனிமையற்ற இல்லம்
தேசத்தில் பல்வேறு வளர்ச்சிகளைக் கொண்டுவர வேண்டிய கடப்பாட்டிலுள்ள ஒவ்வொரு மனிதனும் தனது நேரத்தை வீணடிக்க மாட்டான். ஆனால் இன்று சமூகத்தில் ஒவ்வொரு இல்லத்திலும் மனிதர்களின் நேரங்கள் சுரண்டப்படுகின்றன. காலங்கள் வீணாவது அறியாமல் இருக்கும் இத்தன்மையினை,
“சின்னத்திரை நம்மைச்
சிறைப் படுத்துகிறது…..
வீட்டுக் காவலில் தேசம்.”4
எனும் கவிதை கூறுகிறது. இல்லங்கள் தம் பாதுகாப்பிற்கும், தம் வசதிகளுக்காகவும் என்ற நிலைமாறி, இல்லங்களின் பாதுகாப்பிற்காக நமது சுகங்களை விட்டுத் தர வேண்டியுள்ளது. இதனை,
“வெளியூருக்குப் போனாலும்
வீட்டு ஞாபகமாகவே இருக்கின்றது.
திருட்டுப் பயம்”5
இக்கவிதை விளக்குகின்றது. பிறர் பொருளைக் கவர்ந்து தவறான வாழ்க்கை வாழும் மனப் போக்கு இச்சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிறது. இதன் மூலம் முழுமையான சந்தோசங்களை அனுபவிக்க முடியாமல் மனித மனங்கள் பாடுபடுகின்றன.
“பூக்கத் தயாராய்
தங்கை
கவலைகளும்”6
என்ற கவிதை, மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்தல், திருமணம், வரதட்சணை, சந்தோசமான. இவ்வாழ்க்கை இவற்றின் மேலுள்ள பயத்தை வெளிப்படுத்துகின்றது. சுயமற்ற வாழ்வை,
“என்னை
அழகு செய்வதாய் நினைத்து
வண்ணக் கலவையை
அள்ளிப்பூசி
இன்று பறக்கக் கூட
சிறகுகளை விரிக்க முடியாமல்
நான்”7
இக்கவிதை வெளிப்படுத்துகிறது. தன் அனுபவங்களே கவிதையின் உள்ளார்ந்த பொருளாகிறது என்பதையும், அதுவே சமூகத்தின் உண்மைப் பொருளாகின்றது என்பதை, “தமிழ்க் கவிதைகளைப் பொறுத்தமட்டிலும் கவிதை உண்மைதான் கவிதைக்கு ஓர் உயர்ந்த தரத்தை நல்குகின்றது. கவிஞன் கூறும் உண்மை நாம் உலகில் காணும் உண்மையைப் போன்றதன்று, அவன் கூறும் உண்மை எப்படி இருக்க வேண்டும் என்பதை உரைப்பது”8 என்ற அறிஞரின் கூற்று மெய்ப்பிக்கின்றது. தனி மனிதனின் வேதனைகளில் உயர்நிலையில் அமைந்த கவிதையாக,
“வறுமையின் கொடுமையில்
வாடிக் கிடக்கும் பெண்ணின் வறண்ட மார்பில்
சுரக்காத பாலுக்காக சுவைத்துக் கொண்டிருக்கும்
குழந்தை – அதனை மானமற்று மறைந்து
மானப்பார்வை பார்க்கும் காமுகன்”9
என்ற கவிதையைக் கூறலாம். சமூகத்தில் பாலியல் வன்கொடுமைகளும், திரிந்துபட்ட மனவுணர்வுகளுமாக இருக்கும் மனிதர்களை நினைத்து வேதனைப்படும் தனிமனித விரக்தியை இக்கவிதை வெளிப்படுத்துகிறது.

2.பொதுமைப் பிரச்சனைகள்

“மனித சுதந்திரம், மனித மகிழ்ச்சி ஆகியன பற்றிய கருத்துகளே சிறந்த இலக்கியங்களின் கருவாக அமைய முடியும். வாழ்வின் இன்றியமையாத கூறுகளைப் பிரதிபலித்துக் காலந்தோறும் மனித சமுதாயம் எந்த எந்தப் பாதைகளின் வழியாக நடைபயின்றது என்பதைத் தௌ;ளத் தெளிவாக் காட்டி நிற்கும் கலைப் படைப்புகளே சாகவரம் பெற்று நீண்ட நாட்கள் வாழ்கின்றன.”10
சமூகத்தின் பொதுமையான பிரச்சனைகளையும் கவிஞன் தன் கவிதையின் பாடுபொருளாகக் கொண்டிருக்கின்றான். அவ்வாறான கவிதையாக,
“பொதி சுமக்கும்
மலர்கள்
மெட்ரிக் குழந்தைகள்”11
எனும் கவிதையமைகிறது. பொதி சுமப்பது கழுதைகளாகலாம். ஆனால் பிஞ்சுக் குழந்தைகள் பாட நூல்களைச் சுமந்து செல்லுவது கவிஞனின் மனதைச் சுடுகிறது. மலர் பொதி சுமப்பது கண்டு, தாங்காது கதறுகிறார். வறுமையை விட்டொழிக்க வேறு வழியில்லாத தாய் வேதனையின் உச்சக் கட்டத்தில்,
“அழு!மகனே!அழு!
கண்ணீர் கடலாகட்டும்!
உப்பு விற்றாவது
பிழைக்கலாம்”12
என்று கூறுகின்றாள். சமுதாயத்தின் இழி குரலாக இது காட்ட படுகின்றது.
“எமன் ஓய்வாகி விட்டானா?
உயிர் பறிப்பு செய்கிறதே
மதங்கள்.”13
“வரதட்சனைத் வில்லொடிக்க
வரவில்லை எந்த இராமனும் முதிர் கன்னிகளாய்     சீதைகள்”14
                     “கோவலனைத் தேடிச் சென்ற கண்ணகி
காவல்துறை ஏற்பாட்டில்
விபச்சார ஒழிப்புச் சட்டத்தில்
கைது செய்யப்பட்டாள்”15
“பூப்பெய்தியதுமே
வெட்டி எறியப்பட்ட
சுதந்திரச் சிறகுகள்”16
போன்ற கவிதைகள் சமூகப் பிரச்சனைகளான வரதட்சணை, மதக்காழ்ப்பு, நீதி, சுதந்திரமின்மை எனப் பல தளங்களில் எழுதப் பெற்றிருக்கின்றன.


சமூகத் தீர்வுகள்

கவிதைகள், பல்வேறுபட்ட பிரச்சனைகளின் பாதிப்பாக .இருந்தாலும், அக்கவிதைகளில் எதிர்காலச் சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆசையினையும் கவிஞர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
“சமரச வார்த்தைகளின்
களிம்புகளை நிராகரித்த
எங்கள் கோபம்
சமத்துவ தீர்வுகளுக்காய்
இன்னும் எரிகிறது”17
                     “மனிதம் இல்லா வாழ்க்கை
மனிதன் வாழ்ந்தால்
மனிதத்திற்கே மரணம்”18
எனும் கவிதைகள் சமூகத் தீர்வைத் தருவதாக அமைகின்றது. மனிதர்கள் மனதளவிலும், உடலளவிலும் தீய எண்ணங்கள் கொண்டவர்களாகயிருக்கின்றார்கள். எனவே இவை களையப் பட வேண்டும் என்ற தீர்வை முன்வைக்கும் கவிதையாக,
“அடிக்கடி வந்துபோ மழையே….
குளமில்லா ஊரில்
அழுக்காய் மனிதர்கள்!”19
இக்கவிதை அமைந்திருக்கிறது.
“எரிக்க வேண்டிய
சாதிக் குப்பைகள் பொசுக்க வேண்டிய
பொய்மை ஏடுகள் அழிக்க வேண்டிய
அபத்தஙகள் அன்றாடம் அதிகமாகிக் கொண்டே    வருகின்றன

அதனால் நான் ஓர் தீப்பற்தமாகவாவது
இருக்க வேண்டி முயல்கின்றறேன்”20
எனும் கவிதையில் சமூகத்தைத் தூய்மையாக்கப்பட வேண்டுமென்றால் தீமைகளை அழித்துவிட எரித்துவிட வேண்டும் என்று கவிஞர் தீர்வு கண்டிருக்கின்றார்.
சிற்றிதழ் கவிதைகளில் சமுதாயப் பின்னணியில் அமைந்த கவிதைகள் அளவில் பெருமளவாக இருப்பதைக் கவனிக்க முடிகின்றது அவற்றில் தனிமனித வெளிப்பாட்டுச் சிந்தனைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. சமூகத் தீர்வுகளையும் கவிஞனே தன் கவிதை மூலமாக வெளிப்படுத்துகிறான். சமூகமும், இலக்கியமும் ஒன்றிலிருந்து ஒன்று பெறுமானால் கவிஞர்களின் தீர்வுப்படி நல்ல சமூகமாக எதிர்காலம் அமையும்.

அடிக்குறிப்புகள்

1.ஜி.ஜான் சாமுவேல்,”இலக்கியத்தில் சமுதாயப் பார்வை”, ப-101
2.பொள்ளாச்சி நசன், “சிற்றிதழ்கள்”, பக்-84-85
3.ஜி.ஜான் சாமுவேல், “இலக்கியத்தில் சமுதாயப் பார்வை”, ப-33
4.கா.நா.கல்யாணசுந்தரம், “கவிதை உறவு”, ஏப்ரல்-97, ப-6
5.பொன்.குமார், ‘சிகரம’, மே-99, ப-16
6.வலம்புரி.லேனா, ‘கல்வெட்டுப்பேசுகிறது’, சூலை-98, ப-7
7.தேவநாதன், ‘நண்பர்கள் தோட்டம்’, ஜீலை-99,ப-2
8.ந.சுப்புரெட்டியார், ‘பாட்டுத் திறன்’, ப-30
9.கரிகாலன், ‘நண்பர்கள் தோட்டம்’, அக்-நவம்-99, ப-11
10.ஜி.ஜான் சாமுவேல், “இலக்கியத்தில் சமுதாயப் பார்வை”, ப-110
11.மாடக்குளம் விஜயகுமார், ‘தேசிய வலிமை’, டிசம்-98, ப-10
12.என்.வாஞ்சிநாதன், ‘தேசிய வலிமை’, டிசம்-98,ப-10
13.ஓவியா, ‘ஓடம’, செப்-97, ப-11
14.இனியவன், ‘கல்வெட்டுப் பேசுகிறது’, ப-16
15.டி.மருது பாண்டியன், ‘தேசிய வலிமை’, மார்ச்-99, ப-4
16.சூரியதாஸ், ‘ஓடம்’, ஏப்-மே-97, ப-22
17.மு.முருகேஷ், ‘ஓடம்’, சூன்-97, ப-2
18.சுரா. ‘தேசிய வலிமை’, ப-9
19.ஜெ.பி.சிருஷ், ‘ஒளிநெறி’, ஜன-98, ப-24 ;
20.        ‘கல்வெட்டுப் பேசுகிறது’, நவம்-97, ப-10

புதன், 9 டிசம்பர், 2015

தமிழ்ச் சிற்றிதழ்க் கவிதைகளில்-கண்கள்
                                                     செ .சு.நா.சந்திரசேகரன் 

“கற்று வைத்திருந்த
கலைகள் அனைத்தும்
மறந்து போனது
கண்கள் செய்யும்
கண்கள் முன்பு.”

விஞ்ஞானத்தின் எந்தவொரு சிகரத்திலும் நின்று செய்தாலும் செய்ய முடியாத ஒரு அற்புதப் படைப்பு உலக உயிர்களின் உடல். அந்த உடலின் முதன்மையானதாகவும் மற்ற உறுப்பகளுக்கு மூலகாரணமாக அமைந்து இருப்பது கண்கள் ஆகும். அவ்விதமான கண்கள் குறித்துத் தமிழ்ச் சிற்றிதழ் கவிதைகளில் புனையப்படும் திறன் குறித்துக் காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழ்ச் சிற்றிதழ்கள்

இருபதாம் நூற்றாண்டு தொட்டுத் தமிழில் மேம்பட்ட இலக்கியங்களைப் படைப்பதற்கென்றே ஆயிரக்கணக்கில் ஆண்டுதோறும் தோன்றும் அறிவுசார் இதழ்களைச் சிற்றிதழ்கள் எனலாம். அச்சு இதழாகவும், இணைய இதழ்களாகவும், வலைப்பூக்களாகவும் இவை பரிணாமம் பெற்றிருப்பதை உணர முடிகின்றது. சிறய வாசக வட்டத்திகு மட்டும் குறுகிய எண்ணிக்கை அளவில் அச்சிடப்படுவதால் மட்டுமே இவை சிற்றிதழ்கள் என அழைக்கப்படுகின்றன.
இவ்வகைச் சிற்றிதழ்களில் கண்கள்-குறித்தான கவிதைகள் ஏராளமாக எழுதப் பெற்றிருக்கின்றன. இவற்றை,
1. கண்கள்-குறித்தான தனிநிலைக்கவிதைகள்
2. கண்கள-குறித்தான சார்புநிலைக்கவிதைகள்
என இருவகைப்பாட்டில் காண முடிகின்றது.

தனிநிலைக் கவிதைகள்
தனிப்பட்ட நிலையில் கண்களைத் தனது கவிதைக்குள் கொண்டுவர முனையும் கவிஞன், பழைய மரபாக்கங்களோடு புதிய கற்பனையில் கண்களை உட்படுத்தும் கவிதைகளையே தனிநிலைக் கவிதைகள் எனலாம்ஃ நேரடியாகக் கண்களை மட்டும் பாடுபொருளாகக் கொண்டவை இவை.
சிற்றிதழ் கவிதைகளில் கண்கள் நேரடிக் காட்சிகளை அப்படியே பதிவிக்கும் கருவியாகக் காணாமல் உலக அறிவு, காதல், பாசம், ஏக்கம், வெறுப்பு, உண்மையென விரிந்த தளங்களை உள்வாங்கும் காரணியாக அமைந்திருப்பதைக் காண முடிகின்றது. கண்மூடிச் சிந்திக்கும் தருணங்களில் அனுபவப்பதிவு அல்லது கற்பித்தல் பதிவினால் பெறப்படும் உண்மைநிலையினை எண்ணிக் கவிதைகள் குதூகலமாக-துக்கமாக வெளிப்படுத்தப் பெறுகின்றன. எனவே காட்சிக்காக காணும் கண் வாழ்வு நகர்த்துதலில் தவறுகள் செய்வதாகவே பெரும்பாலான கவிஞர்கள் கண் மீது குற்றம் சாற்றுகிறார்கள். உலகில் நடக்கும் வசதி இல்லது வசதியின்மைக் காரியங்களில் நடக்கும் போலித்துவங்களை உணர்ந்தும் உணராதிருப்பதாக் கண்ணைப் பல கவிஞர்கள் உணர்;த்துகிறார்கள். என்னைத் தேடி எனும் கவிதையொன்றில், எங்கெங்கோ
அலைகின்றேன்
என்னைத்தேடி…..!
இறுதியில் ஒரு சுடர்
எனக்குள் உயர்ந்து
மூடிய விழிகளுக்குள்
பார்க்கத் துவங்கினேன்.  2
வானம் தொட்டது பார்வை!
இமைக்குள் புதைந்தது விழி! 3
என உள்முகப் பார்வையிலேயே தெளிவு கிடைத்ததாகவும், வெளிப்பார்வைத் தன்னை இனம் காட்டவில்லை எனவும் விளக்குகிறார். மானுட வாழ்க்கை இருவகை அமைப்புக்களைக் கொண்ட ஒரு முழுப் பொருண்மை: புறத்தே தோன்றும் ஒவ்வொரு வகையான வாழ்க்கை நிலைக்கும் அடிப்படையான அக அமைப்பு ஒன்று உண்டு. புற அமைப்பின் செயல்பாடு: அக அமைப்பின் வெளிப்பாடு தானே தவிர தன்னிச்சையாக இயங்க வல்லதன்று: இப்புற வெளிப்பாடு அவ்வப்போது மாறி இயங்கும் 4 என்ற அமைப்பியல்வாதக் கோட்பாட்டை இங்கு ஒப்புநோக்கலாம். கவிதைப் படைப்பின் அடித்தளப் பரப்பாக இது அமைகிறது. போலித்துவத்தைச் சொல்ல வந்த கவிஞன்,
கண்களைக்
களவு கொடுத்துவிட்டு
கனவுகளைக் கருத்தரிக்கும்
ஏமாற்றப் பொழுதுகள்
என்கின்றார் கண்களை அவனுக்கே தெரியாமல் பிறர் எடுக்க அனுமதித்து விட்டுக் கனவு காணவைத்து ஏமாற்றப்படுவழத உணர்வுப் பூர்வமாக இக்கவிதை விளக்குகிறது.

முரண்பொருள் கண்கள்
வறுமை எனும் தலைப்பிலமைந்த கவிதை முரண்பொரு தன்மையில் எழுதியிருப்பதைக் காண முடிகின்றது. கிணறு வெட்டினால் தண்ணீர் பெருக்கெடுக்கும். விவசாயம் செய்யலாம். ஆனால் முழுமையாகக் கிணறு வெட்டும் முன்னரே என்ன நடந்தது என்பதை,
ஏழை விவசாயி
கிணறு வெட்டினான்
தண்ணீர்
பெருக்கோடியது
கண்களில் இருந்து
என இக்கவிதை விளக்குகிறதுஃ கண்ணீரைப் படிமமாக்கிக் மற்றுமொரு கவிதையில், விழியில் வழியும் வெள்ளை இரத்தம். கண்ணில் ஜனிக்கும் உப்புநதி என்கின்றார் கவிஞர்.

கவிதை தரும் கண்கள்
பெரும்பான்மைக் கவிஞர்கள் கண்கள் தான் தனக்குக் கவிதைகளைத் தருகிறது எனத் தன் கவிதைகளில் ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார்கள் கண்கள் தன் மனதில் கற்பனைகளை ஓடவிடுகிறது என்பதை,
என்
கண்ணிலும் மனதிலும்
ஒரு கம்பளிப் புழுவாய்
என் கவிதை முளைவிடும்
இக்கவிதை விளக்குகிறது.

காதல் தரும் கண்கள்
மனித உள்ளத்தில் காதல் மரலக்கண்களே முதல் காரணமாக அமைகின்றதுஃ காதலைச் சொல்ல வரும் கவிஞர்கள் கண்களைக் கவிபுனையாமல் செல்வதில்லை எனுமளவு காதல் கவிதைகள் கண்கள் குறித்துப் பேசுகின்றன.
நீ கண்களால்
இதயக் கதவை
உடைத்த பிறகும்
உள்ளே
ஒளிந்து கொண்டவன் நான..
கல்லாய் கிடந்த என்னை
கவிஞன் ஆக்கிய காதலியே
அதென்ன?
உன் கண்களுக்கு மட்டும்
மனதை மத்திட்டுக் கடையும்
மந்திர சக்தி.

காமம் தரும் கண்கள்
உலகில் நல்லதையும், தீயதையும் நம் அறிவுக்குள் கொண்டு செல்வது கண்கள் தான். அவ்வகையில் தன் மனதிற்குள் எழும் தீய பார்வையினால் பிறரைக் காமப்பார்வைப் பார்க்கும் போது, ஏற்படும் இன்னல்களையும் அதனால் ஏற்படும் மனக்கசப்புகளையும் கவிதைகளின் பாடுபொருளாகக் காண முடிகின்றது. அவ்வாறான கவிதைகளாக,
தொடை மொய்க்கும் கண்களையும்
கண்களாலும்
பிரதியெடுக்கும் ஆண்களின்
பார்வைகளைக் கூட்டித்தள்ளு
துடைப்ப மொன்றால்
அன்றைய முடிவில்
புத்தம் புது முலையில்
நிறைய விழிகள் படிந்து விட்டது
எல்லாவற்றையும் உதிர்த்துக்
கைகளில் போட்டுக் குலுக்கினாள்.
இவற்றைக் காணலாம்.

சார்புநிலைக் கவிதைகள்
கண்ணைக்குறித்து நேரடியாகக் கூறாது. கண்ணோடு தொடர்புடையதானவற்றைச் சார்பு நிலைக் கவிதைகள் எனப்பகுத்துக் கொள்ளலாம். பார்வைகளினால் சமூக அவலங்கள், பிரச்சனைகள், உறவுகள், பாசம், இரக்கமென எல்லா கூறுகளும் இனம் பிரித்து அறிய முடிகின்றது. அவை கவிதைகளில் எவ்விதம் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்பதை ஆராயும் போது தனி நிலைக் கவிதைகளைக் காட்டிலிலும் அதிகமாகவே எழுதப் பெற்றிருக்கின்றன. கண்ணை உருவமாகவும், படிமமாகவும், குறியீடுகளாகவும் மற்றும் பல கோணங்களில் பயன்படுத்தி எழுதியுள்ளனர். அவைகள் புறப்பொருள்களை மையம் வைத்த கவிதைகளாக உள்ளன. எடுத்துக்காட்டாய், கண்மலர்ச் சிரிப்பில், மனித நேய குருட்டு விழிகள், விழிகளின் ரப்பையில், விழித்தீக்குச்சிகள், கனவு விழிகளில் கரையும் நினைவுகள், விழி அரங்குகளில் கனவுகளின் நடனம், எனக் கூறப்பெற்றுள்ளன.
கண்ணுக்குத் தெரிந்த
மனித முகங்களில்
மறைக்கப்பட்ட கபடங்கள்
எல்லாமே பொய் முகங்கள்
எனும் கவிதையில் பார்வை பிழையன்று. பார்வையில் படும் பொருள் பிழையாக இருக்கின்றது. எனவேச் சரியாகப் பார்க்கக் கண்ணுக்கு அனுபவம் வேண்டும் எனக் கவிதை தொடர்கிறது. சமூகத்தில் இவ்விதம் மாறானப் பொருள்களைக் காணக் கண்ணுக்குள் கூர்மையும், சக்தியும் வேண்டுமென, இரு கண்ணில் வெப்பம் குறையும் போது,
சூரியனிடமிருந்து கடன் வாங்கு
என்ற கவிதை கூறுகிறது. கண் இருந்தும் பார்வையற்ற குறையுடையோர்கள் குறித்தும் கவிஞர்கள கவிதைகள் எழுதியுள்ளனர்.
சாலை நடுவில்
நின்று கொண்டிருந்த
இருட்டுத் தம்பதிகள்
கடந்திருப்பார்களா….
மீதிச் சாலையை இந்நேரம்
பாடிக் கொண்டு வரும்
பார்வையில்லாத
பிச்சைக் காரனுககுப் பயந்து
பத்தரிக்கையில் புதைத்த முகம்.
என்ற கவிதைகளில் உதவி செய்ய வேண்டிய நிலையிலுள்ள இருவேறு உள்ளங்கள் எப்படி நடந்து கொண்டன என்பதை மிக நுணுக்கமான முறையில் ஏக்கத்துடன் கவிஞர்கள் எழுதியுள்ளனர்.
கண்-மனித உறுப்புகளில் தலையாயது. உலகப் பொருள்களையும், நிகழ்வுகளையும் மூளைக்குள் பதிவிக்கும் அற்புதக் கருவி. அதனைத் திறனாய்ந்து வாழ்வை நடத்தும் கவிஞன் பல்வேறு நிலைகளில் அதனைக் கவிதைக்குள் பதிவு செய்ய விரும்புகிறான். தனி நிலையில் கண்ணைப் பாடம் முறையிலும், சார்பு நிலையாகப் பாடும் முறையிலும், சம அளவில் சிற்றதழ்க் கவிதைகளில் கண்-ஒரு முக்கியவத்தைப் பெற்றுள்ளது.

அடிக்குறிப்புகள்:
1. வெற்றி ஒளி, ஓடம், பிப்-மார்ச் 1997, ப-20
2. வே.சுவாமிநாதன, தேசிய வலிமை பி.99, ப-20
3. அ.அ.மணவாளன், இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக் கோட்பாடுகள். ப-44
4. தீபன், தாராமதி, ஜன.பிப்.-97, ப-15
5. விளாங்குடி விநாயக மூர்த்தி, தேசிய வலிமை செப்.அக்.99, ப-10
6. கவி. இளங்கதிரவன, ஒளிநெறி, ஆகஸ்டு-97, ப-12
7. இன்குலாப், கல்வெட்டு பேசுகிறது. செப்.அக்.97, ப.பின்னட்டை
8. ஆர். சுரேஷ், தேசியவலிமை, பிப்.99, ப-18
9. கோனூர், வைரமணி, கவிக்காவேரி, அக்.நவம்.98, ப-12
10. இலக்குமி குமாரன் ஞானதிரவியம், சுந்தரசுகன், நவம்.97, ப-7
11. க.விநாயகமூர்த்தி, கவிக்காவேரி, மார்ச்.97, ப-6
12. அ.சுபாஷினி, சுந்தரசுகன், ஜுன்.97, ப-90
13. ம.ராஜு, நண்பர்கள் தோட்டம், ஏப்.99, ப-15
14. பாலபாரதி, தமிழ் அமிழ்தம், ப-9








சனி, 4 ஏப்ரல், 2015

பதிவுகள் இணைய இதழில் வந்த கட்டுரை 

தமிழ்ச்சிற்றிதழ்களில்  நவீன படைப்புகள்



செ.சு.நா.சந்திரசேகரன்.
தமிழ்த்துறைத் தலைவர்,
ஜெயா கலை &அறிவியல் கல்லூரி,
திருநின்றவூர்
 
    தமிழ்மொழி வளர்வதற்கான ஊற்றுக் கண்ணாகச்சிற்றிதழ்கள் இக்கால கட்டத்தில் விளங்குகின்றன.தமிழில் வெளிவரும் சிற்றிதழ்கள், மேலை இலக்கியங்களுக்கு ஒருபடி மேலே சென்று, உலக இலக்கியத் தரத்தைத் தமிழுக்குத் தந்து  கொண்டிருக்கின்றன எனலாம். கவிதை, சிறுகதை, குறுங்கதைகள், திறனாய்வுகள்,துணுக்குகள் எனப் பல்வகைப்பட்ட இலக்கியங்களைத்தரத்தோடு வெளிவரச்செய்ய முயல்பவைகளாகவும்  இச்சிற்றிதழ்கள் அமைந்திருக்கின்றன.இலக்கியத் தாகத்தைக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களை ஊக்குவித்து,அவர்களின் படைப்பு ஆற்றலுக்கு தீனி போடக் கூடிய மற்றொரு பயனையும் சிற்றிதழ்கள் செய்கின்றன.

சிற்றிதழ் தன்மை

எதிர்காலத்தில் தமிழ்ச்சூழலில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அது சிற்றிதழ்களால் மட்டுமே நிகழும் என்பதை உறுதியாகக் கொள்ளலாம். 1 என்கிறது தமிழ் விக்கிப்பீடியா .மேலும் வணிக இதழ்களுக்கு மாறாகச்சிற்றிதழ்கள் அமைந்திருக்கும் தன்மையினைப் பேச்சுத் தமிழும் ஆங்கிலக் கலப்பும் மலிந்திருக்கும் பெரும் பத்திரிக்கைச்சூழலுக்கு முற்றிலும் மாறுபட்டு, தமிழை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றுபவை சிறுபத்திரிக்கைகள் 2  என மு.யாழினி வசந்தி கூறுவார்.தமிழக அளவிலும்,உலகில் தமிழர்கள் வாழும் பகுதியிலும் சிற்றிதழ்கள் பெரும்பான்மையாக இன்று வெளியிடப்படுகின்றன.இவ்விதமான சிற்றிதழ்களில் நவீன படைப்புகள் எவ்விதமான தன்மையினைப் பெற்றிருக்கின்றன என்பதை  ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
நவீன சிறுகதைகள்
சிறுகதைகள் தற்பொழுது,நவீன இலக்கியக் கோட்பாட்டுச் சிந்தனைகளோடு சிற்றிதழ்களில் எழுதப்பெறுவதைக்  காணமுடிகின்றது.தமிழ்ச்சிற்றிதழ்கள் ஆண்டு  தோறும் சுமார் இரண்டாயிரம் இதழ்கள் உலகில் வெளிவருவதாக அறிகிறோம்.அந்தளவிற்கு இணையங்களும்,வணிக இதழ்களும், சிற்றிதழ்ச்செய்திகளும் சிற்றிதழ்களின் வரவை அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. தமிழம்,கீற்று,கூடு,நக்கீரன்(கனடா), தமிழ் மணம் போன்ற இணைய தளங்களில் தொடர்ந்து சிற்றிதழ்களின் வரலாறு மற்றும் திறனாய்வுகள் வெளிவருகின்றன.அவற்றில் சிறுகதைகள் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன. சுந்தரசுகன், தொடரும், முங்காரி, ஓடம், பயணம்,நிழல்,கனவு,சதங்கை,இலக்கு போன்ற சிற்றிதழ்களில் நவீன கோட்பாட்டு அடிப்படையில் சிறுகதைகள் வெளியிடப்படுகின்றன. வன்மி, இரா.நடராஜன், ஆதவன் தீட்சண்யா, வா.மு.கோமு, கழனியூரன் விசும்பு, ஆ.சந்திரபோஸ் போன்ற எழுத்தாளர்கள் இவ்விதமான சிறுகதைகளை எழுதுகின்றனர்.
நனவோடை உக்தியைப் பயன்படுத்தி எழதும் சிறுகதைகள் அதிகத்திருப்பைதைக் காண முடிகின்றது.மொழிநடை ஒவ்வொரு சிறுகதையிலும் வேறுபாட்டைக் கொண்டவையாகவும், வாசகரின் மனவோட்டத்தைச் சுண்டி இழுக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.
தேவரசிகன் எழுதிய நாங்கேட்டேல ஏகே எனும் சிறுகதை சுந்தரசுகன் இதழில் வெளிவந்தது. 3 அக்கதை உளவியல் சார் கோட்பாட்டை உள்புகுத்திய கதையாகவும், மொழிநடை சிறக்க எழுதியதாகவும் இருக்கிறது.சமுக வெளிப்பாட்டை நவீனத்துடன் எடுத்துரைக்கும் சிறுகதைகள் அதிக அளவில் எழுதப்பெருகின்றன.உதாரணமாக விலங்குகள் வதைபடுவதை, உறுப்பு எனும் கதை நேர்த்தியாக எடுத்துரைக்கிறது.இக்கதையை பா.சத்தியமோகன் கனவு இதழில் எழுதியுள்ளார். ‍‌4 பின்நவீனதத்துவச் சிறுகதைகளாகவும், மாய எதார்த்தவாதச் சிறுகதைகளாகவும், பல கதைகள் எழுதப் பெறுகின்றன.
நவீன கவிதைகள்
கவிதைகள் தமிழ்மொழியின் தன்மையினை உலகமொழிகளுக்கு மேலாக எடுத்துச்சொல்லும் அரிய பணியினைச்செய்கின்றன. படிமக்கவிதைகள், குறியீட்டுக் கவிதைகள் பெண்ணியக் கவிதைகள் ,தலித்தியக் கவிதைகள் ,
உளவியல் கவிதைகள், மார்க்கியக் கவிதைகள், பின்நவீனத்துவக் கவிதைகள்,மிகைஎதார்த்தவாதக் கவிதைகள், மாய எதார்த்தவாதக் கவிதைகள் என மேலைநாட்டுக் கோட்பாட்டு இஸங்களைப் பயன்படுத்திக் கவிதைகள் இன்றைய சிற்றிதழ்களில்  வெளிவருகின்றன.வணிக இதழ்கள் இவ்வாறு கவிதைகளை வெளியிட மறுக்கும் நிலையில், சிற்றிதழ்கள் இவற்றை வளர்க்கின்றன.
திசையெல்லாம் தீ எனும் தலைப்பில் மாயவனின் கவிதை இயற்கையைப் படிம்மாக்கித் தந்துள்ளார். தீ என்பது பல்வேறு நிலைகளில் படிமமாக்கப் பட்டுள்ளது.அக்கவிதை,
சித்திரைச்சூரியன்
துப்பி விட்ட எச்சில்.

ரெளத்திரத்தின் ஆதி.

அடிவயிற்றுப் பசியின்
ஓர் சொல்.

தொட விடாத
தொட்டால் விடாத கம்பீரம்.

பனிக்காலத்தில்
வயது பாராது
அகப்படுத்தும் சிகப்பு நங்கை 5
என்பதாகும். இக்கவிதை சிறந்த படிமக் கவிதையாக உள்ளது.

மலர்களின் இதழ்களில்
நகங்களின் கீரல்.

காக்கியும் காவியும்
கற்புக் களத்தில்
சமாதிக்காகவாய் சண்டையிட்டு
சமாதியாகும் சமயங்கள் .

கோவணங்களின் உழைப்பு
சுவிஸ்-இல் குவிப்பு.

கெட்ட கூட்டுறவால்
தள்ளாடும் வருங்காலத்துத் தூண்கள்
எனும் இக்கவிதை,குறியிட்டுக் கவிதையாக,தேசியவளிமை இதழில் எழுதப்பெற்றதாகும்.சமுகத்தின் இழிந்த குரலை எடுத்தோதும் கவிதையாக வெளிப்பட்டிருக்கிறது.கூற வந்த நேரடிச்செய்தியை, வாசகர் மனதில் உள்ள அடிப்படைப் பண்பாட்டுச்சின்னங்களை தொடர்புப்படுத்திக் குறியீடாக்கி எழுதுவது நவீனமானதாகிறது.
  பெண்ணியக் கவிதைகளும் சிற்றிதழ்களில் பெண்ணிய எழுத்தாளர்களால் எழுதப் பெற்றிருக்கின்றன.சமஉரிமை, கட்டுப்பாடுகளைக் கட்டவிழ்த்தல், சுதந்திரம் எனக் கவிதைக்கான உள்பொருள்கள் பெண்ணியம் சார்ந்ததாகக் அமைகின்றன.
நாங்கள் துளிகள் அல்ல
உளிகள் .
நாட்டைக் காக்கும்
வேட்டை நாய்கள்.
நாங்கள் மிதியடி அல்ல
மிதிக்கப் போகும்
யானைக் கூட்டம்.
நாங்கள் வளையும் மூங்கில்
வளையப் போகும் வில்லும் அம்பும்.
நாங்கள் அடிமைகள் அல்ல,
விடியலை நோக்கும் வீராங்கனைகள். 7
எனும் கவிதை பெண்களின் நிலை சமூகத்தில் முன்னேற்றத்தை நோக்கி, வீறு கொண்டு எழுந்திருக்கிறார்கள் என்று பறை சாற்றுகிறது.

பிற படைப்புகள்
ஆய்வுக் கட்டுரைகள், திறனாய்வுகள் எனப் படைப்புகள் சிற்றிதழ்களில் பல்கிக் கிடக்கின்றன.இலக்கிய விமர்சனங்கள், சமூக விமர்சனங்கள், சமூகம் ஏற்க வேண்டிய/மாற்ற வேண்டிய கொள்கைக் கோட்பாடுகள் குறித்த கட்டுரைகளும் எழுதப் பெறுகின்றன.நேரடியான கருத்தைக் கூறும் விமர்சனங்களும் சமூகத்தை நோக்கியும்,இலக்கியத்தையும் நோக்கியும் வைக்கப் படுகின்றன.இவை காலங்களின் சக்கரத்தை நேர்வழிக்குத் திரும்பும் அஸ்திரங்களாக இருக்கின்றன.
இவை தவிர துணுக்குகள் நகைச்சுவைகள்,நவீன ஓவியங்கள்,உலக இலக்கியங்கள், உலக எழுத்தாளர்கள் எனச்
சிற்றிதழ்களின் ஆக்கங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.நவீன ஓவியங்கள்,நவீன படைப்புகள் என நவீனத்தை எளிய வாசகர்களிடமும் கொண்டு செல்லும் அரிய பணியைச் சிற்றிதழ்கள் செய்கின்றன.
  இணைய இதழ்களின் பெருக்கமும்,சிற்றிதழ்களின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகிறன.சிற்றிதழ்களின் மாற்று வடிவமாகவும் இன்றைய இணைய இதழ்கள் இருக்கின்றன.இணையம் உலகத்தை கைக்குள் அடக்கி விடும் அற்புத சாதனம். சிற்றிதழ் எழுத்தாளர்கள் இணையத்திலும் நுழைந்து இணைய இதழ்களை நடத்துகின்றனர்.
  சிற்றிதழ்களை வாங்கிப் பயன் பெறுவோம்.சிற்றிதழ்கள் அழிந்து படாமல் பாதுகாத்து வைப்போம்.உலக இலக்கியங்களுக்கு மேலாகத் தமிழ் இலக்கியத்தைக் கொண்டு செல்ல சிற்றிதழ்களை ஆதரிப்போம்.

அடிக்குறிப்புகள்
3)       தேவரசிகன்,சுந்தரசுகன், ஏப்.98,ப-7
4)       பா.சத்தியமோகன்,கனவு.செப்.98,ப-5
5)       மாயவன்,முங்காரி,அக்.98,ப-12
6)       மு.மு.முத்தையா,தேசிய வலிமை ,நவம்.97,பக்-10-11
7)       தமிழப்பன்,தமிழ்ப்பாவை,ஜீலை.99,ப-13
   

   













வெள்ளி, 3 ஏப்ரல், 2015

                 தமிழ்ப்பணி- மாத இதழில் வெளிவந்த கட்டுரை, சூன்-2003
(படம் :நன்றி -தினமணி.காம்.)

சாமி பழனியப்பன் கவிதைகள் - ஒரு மதிப்பீடு
-செ.சு.நா.சந்திரசேகரன்

பெருங்கவிப் பகலவர் சாமி.பழநியப்பரின் இனியதேன் கவிதைகளை வாசித்தேன். சந்தமும், சத்தான பொருளும் கண்டு நெகிழ்ந்தேன். பெரிய பெரிய வல்லரசுகளையும், பிரமுகர்களையும் ‘ஆட்டம்’ காண வைத்த புரட்சி முனையுடையது, ஊற்றெழுதியின் முனை. அதனாலேயே “வாள்முனையை விட வல்லமை கொண்டது ஊற்றெழுதியின் முனை” என்பர். ‘வாரச்செய்தி’யின் இதழாளர் கை போடும் கோலங்கள். சமுதாயத்தின் எழுச்சியைப் பறை சாற்ற வேண்டும் என்ற பேரவாவோடு நெம்புமுனைக் கவிதைகளாக வெளிவந்திருக்கின்றன. ‘காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்’ என்று பாவேந்தனால் பாரட்டப்பட்டப் பத்திரிகைத் தளத்தலிருந்து கொண்டு பாரின் வளர்ச்சிக்கும் இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்டவர் இக்கவிஞர். பல ஏடுகளிலும் தன் கவித்திறத்தால் சரித்திரத்தின் பழமைத் தளங்களைச் சாடிச் சவுட்டி அடித்துப் புத்துணர்வு தந்திருக்கின்றார்.
ஊன் உயிரில் தமிழுணர்வு உறைய, ஒய்யாரத் தமிழினம் வாழ, சீர்தூக்கித் துலாக்கோல் எழுத்தால் சீர்மை செய்தமைக்குப் பல கவிதைகள் இத்தொகுப்பிலுள்ளன. ‘தலை நிமிர் தமிழா’ ‘தமிழினத்திருநாள்’, ‘மலரும் தமிழும்’ என்ற கவிதைகள் தீர்க்கதரிசனமாய் இளைய தலைமுறையினர் காத்து, திருவள்ளுவம் ஒப்ப மனனம் செய்ய வேண்டிய மாப்புகழ்க் கவிதைகள். மதிகூர் செயல்திற ஆளுமைத்திறன் கொண்ட கவிஞர் போடும் செம்பாதையை – மதித்து மையப்படுத்தும் நிகழ்வுகள் சொர்க்கபுரியாகத் தமிழகத்தை ஆக்கும் என்பதில் பலத்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
“சாதி மத மென்று சாற்றும் சழக்கரைத் தாவித் தொலைத்திடடா” எனும் போது எத்தனை வேகம் கவிஞருக்கு? அருட்பிரகாசரும் தம் அருட்பாவில் ‘52’ இடங்களில் ‘சாதி பொய்யெனவே பகர்கின்றார்.’ “அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே” என்ற நேர்விளைவுக் கருத்திற்கு மாறாகக் கவிஞர் எதிர்விளைவுக் கருத்தாக்கம் தருவது காலத்தின் கட்டாயமாகிறது. இதைப் போலவே இந்தி எதிர்ப்புக் குரலும் வீறிட்டெழுகின்றது. இந்தி ஆதரவாளர்களைப் ;பன்னாடை’, ‘சொந்தமொழி பயின்றிடற்குச் செய்யாச் சோதாக்கள்’ ‘தறுதலைகள்’ என்று நிந்திக்கும் கோபம் கவிஞரின் தமிழின, தமிழ்மொழிப்பற்றை வெளிப்படுத்துகிறது.
“நீள்வையம் போற்றும் வகை வாழ வேண்டின்
ஆக்கிடுக மக்களுக்கென இலக்கி யங்கள்
அவனியே எதிர்த்திடினும் அஞ்ச வேண்டாம்.”
என்பதிலிருந்து, கருத்தால் இருதடம் போடும் இலக்கியவாதிகளில் ‘கலை மக்களுக்காகவே’ எனும் பிரிவில் நின்று புரட்சி நாயகனாகப் புதுத்தமிழின் நடைபாய்ச்சித் தாரக மந்திரம் ஒதுகின்றார். மக்களுக்கான இலக்கியங்களே மக்களைப் புதுமையாக்க முயலும். இதுவே வரலாற்றுச் சுழற்சியும் ஆகும். பாரதியும், பாவேந்தனும், முடியரசனும், இதையே செய்தனர். அவ்வகையில் பகுத்தறிவுப் பாவலர்கள் வரிசையில் ஒரு பெருமிடத்தைக் கவிஞர் பெறுகிறார். சிந்தனையாளர் சாக்ரடீஸின் சிந்தனைகளுக்கு ஒப்ப தன்னைச் சிந்தனைவாதியாகவும் பல கவிதைகளில் இனம் காட்டியுள்ளார்.
இனத்தின் களைகளைப் பிடுங்கவும் தீச்செயல் நடக்கும் பொழுது, அதைத் தடுத்திட உளம் பதைத்து எதிர்க்குரல் கொடுப்பதும் கவிஞர் பெருமக்களின் இயல்பு. அவ்வகையில் ‘சுடர்க்கதிர்’ முன்னால் சுள்ளிகள் சாம்பலாகும்’ எனும் கவிதை மிளிர்கிறது. சமூகப் பிரக்ஞையுடன் தன்னினம் வாழ வழிகானும் சிந்தனைப் போக்குக்கு நிறைய கவிதைகள் கட்டியம் கூறத் தக்கனவாகவுள்ளன.
‘நிலநடுக்கம்’ குறித்த கவிதையில் சமூகக்கேடர்களின் தோலை உரித்துக் காட்டி, இதனால் தானோ நிலமகளே கோபப்படுகிறாய் எனக்கேட்டு, இன்னுயிர்கள் மாய்ந்தமைக்கு வருந்துகிறார். எத்தனை கவித்துவம் சான்றோர் வரிசையில் இப்படிக் கற்பனை செய்து பார்த்தமையை மகாக்கவிஞர் சாமி பழநியப்பரிடமே காண்கின்றேன். தேசத்தின் நலனில் அக்கறையோடும், வரலாற்றுப் புருஷர்களின் சரித்திரத்தைப் பதிவு செய்யும் தாகத்தோடும், பெண்ணுரிமை பேசும் மோகத்தோடும், தன் எழுத்துக்களைக் கவியரங்க மேடைகளில் வீச்சாய் வீசியிருக்கின்றார். கவிதை வரலாற்றில் பாவேந்தருக்குப் பின் எழுச்சியோடும், தெளிவோடும் உலாவந்த உன்னதக் கவிப்பேரரசனான சாமி பழனியப்பனை இன்னும் மிகச்சரியான இடத்தில் வைத்து அவர்தம் கவிச்சிறப்பை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது கடமைகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது. இதைக் தமிழுலகம் செய்யப் பெருமைப் பட வேண்டும்.
அழகியல் கவிதைகளிலும் தன் கவித்துவத்தால் பரவசப்படுத்தும் கவிஞர் ‘காதலையும்’ விட்டு வைக்கவில்லை.
“சுண்ணாம்புச் சூளையிலே இட்ட கல்லாய்த்
   துயர்ப்படுத்தல் எதற்காக? ஐய கோவென்
கண்ணுறங்கும் வகையறியேன்: அவைகள் நம்மைக்
   காட்டுகெனப் பிய்த்தென்னைத் தின்ப தேனோ?”
என்ற இக்கவிதைகளில், காதலியின் மனத்துயரைச் சங்க இலக்கியப் பாங்கில், உவமைகளால் நிரப்பி விட்டிருக்கின்றார். அற்புதமான மனவுணர்வுச் சித்திரக் கவிதை இது, அடுத்துக் காதலன் பதிலளிக்கின்றான். அதில்,
“வான் முகட்டை நிலவணங்கு தழுவும்போது
    வலிவிழந்து போகுமெனது ஐம்புலன்கள்
கூன்பிறையைக் குவளையினை எட்பூ தன்னைக்
    கொவ்வையினைக் காண்கின்ற போழ்தி லெல்லாம்
நனிங்கே உனையெண்ணி நலிகின்றேன்.”

என்று தன்னிலையை விளக்குகின்றான். நிலவு சூழும் அந்தப் பொழுதுகள் வான்முகட்டைத் தழுவுவதாகவும். தழுவாது நிற்கும் காதலன் பார்வையில் அது அணங்காகிறாதாம். என்ன அற்புதமான அழகுக் கவிதை, நிலவு, மண், பொன்னி வாழ்க, அழகின் சிரிப்பு, நீயுமா வதைக்கிறாய் எனும் கவிதைகள் தீந்தமிழ்ப் பழங்கள், ‘தமிழ்ப்பணி’ இதழில் வெளிவந்த ‘புதிய ஆத்திசூடீ’ -  மரபாக முன் எழுதியோரிடமிருந்து வார்த்தைச் சுருக்கத்தலும், பொருள் பெருக்கத்தாலும் மாறுபட்டு முன் நிற்கும் பேறு பெற்றிருக்கிறது. ஒவ்வொரு இரு சீருக்குள்ளே கருத்தாறு பாய்கிறது. ‘ஒப்பியல் பயில்க’, ‘கேள்வி பெருக்கு’ என்பதில் தான் எத்தனை ஆழம். குழந்தைப் பருவப் பாடத்திட்டத்தில் இதைக் கட்டாயமாகத் தமிழக அரசு பாடமாக்க வேண்டிய கவிதையிது.
சமூகக் தீர்வுக் கவிதைகள் எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் வாழும். அது தவிர்த்து சமூகம் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும். இன்றையச் சூழ்நிழலயில் பொருந்தும் கவிதை ஒன்று 1947 – ஆம் ஆண்டே ‘பொன்னி’ இதழில் வெளிவந்திருக்கின்றது. அக்கவிதை,
“கல்வித் துறையினில் ஆக்கமில்லை – தீய
    கண்மூடிக் கொள்கைகள் மாளவில்லை
புல்லரின் சூழ்ச்சி முறுவலிலே - இங்கு
    பூக்கும் சுதந்திரம் யாருக்கடா?”
என்பதாகும். ‘பூக்கும் சுதந்திரம்’ எனும் வார்த்தைக்குள் ஆயிரமாயிரம் பொருள்களை நம்மால் எடுத்துக் கொள்ள முடியும். இந்தக் கேள்வி இப்போதும் பொருந்துமல்லவா?
சாமி.பழநியப்பர் – எழுத்தால் சாதனைகள் பல செய்த அற்புதக் கலைஞர். கவிப்பிரபஞ்சத்தின் பகலவன். குன்றாமலை அருவி. குடை தந்து காக்கும் காவலன். தனித்தமிழ்ப் பற்றாளர். பார்போற்ற வந்துதித்த பாவலர் அவர். இன்னும் எழுதி, எழுதிப் பன்னூல் தரத் தமிழினம் தாழ்ந்து உனைக் கேட்கிறது. எழுதுக இன்னும் கவிவேந்தே!